![O.S Maniyan interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/VVmtBTkTIIo218drADiIIj4vh5_Rklh-7cwEFUh1f1M/1602249057/sites/default/files/inline-images/o-s-manian.jpg)
"தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்போம் என்கிற பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து, கல்யாண வீட்டிற்குச் சாப்பிட வந்தவர் அடுப்பை இடித்துவிட்டுச் செல்வது போல இருக்கிறது", என நக்கலடிப்பது போல் பதிலளித்தார் அமைச்சர் ஓஎஸ்.மணியன் விமர்சனம்.
நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் சுனாமி குடியிருப்புக்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்தார் அ.தி.மு.க மா.செவும் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன். அந்த நிகழ்ச்சியில் 111 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து இன்றைய அரசியல் நிலவரம் குறித்துப் பேசினார்.
அதில், அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருப்பது, 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிவாகை சூட்டுவதற்காகவே என்றார். பிறகு, கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, "கண்ணு மாறாமல் இருந்தால் காட்சிகள் மாறாது, கண்ணுக்கு காமாலை ஏற்பட்டால் கட்சிகளின் காட்சிகள் மாறும்' என்றார்.
பா.ஜ.க பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க கூட்டணிக்கும் செல்வோம் என்கிற கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், "கல்யாண வீட்டிற்குச் சாப்பிட வந்தவர் அடுப்பை இடித்துவிட்டுச் செல்வதுபோல் உள்ளது, அவரது பேச்சு. தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்கவே இவ்வாறு அவர் பேசுகிறார்" என்றார்.
தி.மு.க இணையவழி உறுப்பினர் சேர்க்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது என்கிற கேள்விக்கு, "பக்கத்தில் எத்தனை பூஜ்யம் வேண்டுமானாலும்" என்று கிண்டலடிப்பதுபோல பேசி முடித்தார்.