Skip to main content

“நீங்க கருப்புக்கொடி காட்டினால், நாங்க பச்சைக்கொடி காட்டுவோம்!” -அமைச்சரை ஆட்டிவைக்கும் மோடி போஃபியா!

Published on 09/04/2018 | Edited on 09/04/2018


 

kt rajendrabalaji 600.jpg


விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில்,  உண்டு உறைவிட நீட் தேர்வு பயிற்சி மையத்தை இன்று தொடங்கி வைப்பதற்கு வந்திருந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தியாளர்கள் சந்திப்பில், தன்னை ஆட்டிப்படைக்கும் ‘மோடி போஃபியா’வை, வழக்கம்போல் வெளிப்படுத்தினார்.    
 

“நல்ல டாக்டர்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான், தமிழ்நாடு அரசும்,  பள்ளிக்கல்வித்துறையும்,  அமைச்சர் செங்கோட்டையனும்  இதற்கான ஏற்பாடுகளை பெரிய அளவில் செய்திருக்கிறார். 
 

காவிரி பிரச்சனையில் மு.க.ஸ்டாலினுக்கு நடக்க வேண்டும் என்ற ஆசை; நடக்கிறார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, காவிரி பிரச்சனையைக் கண்டுகொள்ளாமல், இப்போது போராட்டம் நடத்துவது திமுகவின் ஏமாற்றுவேலை. 
 

பிரதமர் 12-ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்றால், பிரதமரிடம் முறையிட முதலமைச்சர் தயாராக இருக்கிறார். முறையிடுவார்; கோரிக்கை வைப்பார்; அழுத்தம் கொடுப்பார். காவேரி பிரச்சனையா? முல்லைப் பெரியார் பிரச்சனையா? கச்சத்தீவு பிரச்சனையா? அத்தனையிலும் துரோகம் செய்த கட்சி திமுக.; தியாகம் செய்த கட்சி அதிமுக. 

 

kt rajendrabalaji 600.jpg


 

கருப்புக்கொடி போராட்டம் நடத்தி பிரதமரை உசுப்பேற்றுவது,  மத்திய அரசை பகைத்துக்கொள்வது, மத்திய அரசுடன் சண்டை போடுவது, இதெல்லாம் காரியம் சாதிக்கிற வேலை கிடையாது. அவங்க கருப்புக்கொடி காட்டினார்கள் என்றால், நாங்க பச்சைக்கொடி காட்டுவோம். நமக்கு காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும்; காவிரி தண்ணீர் வேண்டும். இதுதான் நமது கோரிக்கை. பிரதமரிடம் சண்டை போடுவதா நமது கோரிக்கை? பிரதமரை பகைத்துக்கொண்டு, சண்டை போட்டுவிட்டு யாரிடம் போய் கோரிக்கை வைப்பது? யாரிடம் போய் பேசுவது? இந்தியாவின் அதிபராக(?) இருக்கக்கூடிய பிரதமரிடம் போய் சண்டை போடுவதா நமது வேலை? நமக்குக் கிடைத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, நாங்கள் உங்களது நண்பர்கள்தான் என்று நிரூபிக்கின்ற வகையில், அவரிடம் மனு கொடுப்போம்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்வோம்.  மத்திய அரசும் தேவையான முடிவை எடுக்கும். 
 

இங்கே எல்லாமே அரசியல்தான். கர்நாடகத்தில் அரசியல் நடந்துக்கிட்டிருக்கு. இங்கே திமுக ஸ்டாலின் பண்ணுவது அரசியல்தானே? ஏன்? மத்தியில் பவர்ஃபுல்லா இருக்கும்போது, நீர்ப்பாசனத்துறையைக் கேட்டு வாங்கியிருக்க வேண்டியதுதானே? அப்படி வாங்கியிருந்தால், காவிரி அணைக்கட்டு ஷட்டர் சாவியை வாங்கி கையில் வைத்திருந்திருக்கலாம் அல்லவா? செய்யவில்லையே?  காவிரி விவகாரம்  இழுத்துக்கொண்டே போக வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. காரணம் – கர்நாடகாவில் அவர்களுக்கு தொழில் இருக்கிறது; தொழிற்சாலைகள் இருக்கின்றன. திமுகவினரின் உறவினர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டும்; தொழிலைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான், திமுகவுக்கு இருக்கிறது. அதிமுகவினருக்கு அங்கே பெரிய தொழிற்சாலைகள் கிடையாது. உறவினர்களும் எந்தத் தொழிலும் பண்ணவில்லை. ஆக, எங்களுடைய நோக்கம் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ வேண்டும். 

மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்று சொன்னால் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்று ரஜினி சொன்ன கருத்து சரிதான். அவர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லையென்றால், தமிழர்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாகும். அதைத் தடுக்க முடியாது. இதைத்தான் உரிய முறையில் அதிமுக அரசு கேட்கிறது. அதற்காக சண்டை போட்டுத்தான் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நியாயமான முறையில், அறப்போராட்டம் நடத்தி, கேட்பதுதான் நியாயம். அந்த அறப்போராட்ட வழியைத்தான் அதிமுக அரசு பின்பற்றி வருகிறது.” என்றார்.
 

தமிழகத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்கு ‘ஜிங்-சக்’ அடிப்பதில்,  முதல் இடம் தனக்கே என,  படுவிவரமாகப் பேசி வருகிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. 
 

சார்ந்த செய்திகள்