Skip to main content

தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்; இபிஎஸ்க்கு மீண்டும் சிக்கல்?

Published on 26/02/2023 | Edited on 26/02/2023

 

OPS letter to Election Commission; Trouble again for EPS?

 

அதிமுக சட்ட விதிகளில் எந்த திருத்தங்களையும் மேற்கொள்ளக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் குமார் அமர்வு வாசித்தது. அதில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழு செல்லும் என்றாம் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் நீக்கமும் செல்லும் என பழனிசாமி தரப்பினர் கூறி வந்தாலும் பொதுக்குழு செல்லும் என்று சொன்ன உச்சநீதிமன்றம் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சொல்லவில்லை என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.

 

இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், இத்தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு நேற்று முன் தினம் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “அதிமுக பொதுக்குழு செல்லும் என்று கடந்த 23-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது.  தீர்ப்பின் 35-வது பத்தியில் பொதுக்குழு தீர்மானங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான சிவில் வழக்கை தாக்கல் செய்து தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

 

மேலும் , “கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்படவில்லை. இந்த பதவிகளுக்கான காலம் 2026 -வரை உள்ளது.

 

எனவே அதிமுக பொதுக்குழுவில் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சட்ட விதிகளில் எந்தவித திருத்தமும் செய்யக்கூடாது. இந்த திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் அது நீதிக்கு அப்பாற்பட்டது. அது மட்டும் இன்றி என்னுடைய சட்டப்பூர்வமான உரிமையைப் பாதிக்கும். எனக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தும். ஆகவே, ஜூலை 11-ந் நடந்த பொதுக்குழு தீர்மானங்களையும், கட்சி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது” என கூறி கடிதம் எழுதியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்