சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஒ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றம் பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.
ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பேனர்களிலும் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மற்றும் இ.பி.எஸ் புகைப்படங்கள் மட்டுமே இருந்தன. இந்நிலையில், ஒ.பி.எஸ் பொதுக்குழுவிற்கு வருவாரா என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். முன்னதாக கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேறும்படி கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக ஒற்றைத் தலைமை தீர்மானம் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டதும், ஒ.பி.எஸ், வைத்திலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில், இன்று உயர் நீதிமன்றத்தின் பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு நடந்துவருகிறது. இதில், தற்காலிக அவைத்தலைவரான தமிழ் மகன் உசேன் இருக்கைக்கு அருகில் ஒ.பி.எஸ்.க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையை கைப்பற்றியுள்ளார்.
இதனால், அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.