Skip to main content

41வது தற்கொலை இது; ஆளுநரின் மனம் இறங்கவில்லையா? - அன்புமணி

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

online rummy issue anbumani asked question via twitter  to tamil nadu governor

 

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை ராமநாதபுரம் பகுதியில் வசித்து வரும் பொறியாளர் பாலன் என்பவர் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு பணத்தை இழந்ததுடன் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவில், "தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கடந்த 03.08.2021-இல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 41 வது தற்கொலை இதுவாகும். கடந்த 3 நாட்களில் இரு இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை கொண்டது பெரும் சோகமாகும். தந்தைக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி இழந்தது தான் பாலனின் தற்கொலைக்கு காரணம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

 

ஆன்லைன் சூதாட்ட தடை மட்டுமே இளைஞர்களை மீட்கும்; காக்கும். 41 உயிர்கள் பலியான பிறகும், 88 நாட்களாகக் காத்துக் கிடக்கும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது. இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு  ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார். மேலும் 41 பேர் பலியாகியும் ஆளுநரின் மனம் இரங்கவில்லையா? எனக் கேள்வியும் எழுப்பி உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்