ஆன்-லைன் கல்வி முறையில் மாணவர்கள் தடம் மாற வாய்ப்புள்ளதால் மாற்று வழியை ஆராய வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த கல்வி ஆண்டின் இறுதிமுதல் கரோனா நோயின் தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டன. இந்தக் கல்வி ஆண்டும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது அனைவரும் அறிந்ததே. தற்போது ஆன்-லைன் கல்வி முறை அறிமுகப்படுத்தப் பட்டு நடைமுறையில் உள்ளது.
27 % முதல் 30% வரை மாணவர்கள் ஃபோன், லேப்டாப் வசதி இல்லாதவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. சமச்சீர் இல்லாத கல்வி, சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களது கண்களுக்கு பாதிப்பு வரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரச்சனை ஆபாச இணையத்தளங்கள் தடை செய்யப்படாமல் ஆன்-லைன் வகுப்பு நடத்தப்படுவது. அதனால் மாணவர்கள் தடம் மாற வாய்ப்பு உள்ளது.
தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆன்-லைன் கல்வி இன்று நடைமுறையில் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. நேற்று தேனியில் ஆன்-லைன் வகுப்பு புரியவில்லை என்று 10ஆம் வகுப்பு மாணவன் அபிஷேக் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது.
தொலைக்காட்சி வழியாக தனியார் பள்ளிகளும் பாடங்கள் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக ஆன்-லைன் கல்வி தடை செய்யப்பட வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் கல்வியை மட்டும் சார்ந்தது அல்ல. ஒழுக்கத்தையும் சார்ந்தது என்று கூறியுள்ளார்.