
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கரூர் மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையத்தில் நேற்று இரவு நடைபெற்ற பரப்புரையில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “1972 ஆம் ஆண்டு அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி 3 முறை ஆட்சி நடத்தி சத்துணவு திட்டம் போன்ற சாதனை திட்டத்தை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். பின்பு ஜெயலலிதா 16 ஆண்டுகாலம் தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி தமிழக மக்கள் நலனுக்கு வாழங்கினார்.
தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த வரலாறு, பெருமை அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. தேசிய அளவில் 24% இருந்த உயர் கல்வி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 52% ஆக உயர்ந்தது. காவிரி பிரச்சனையில் இறுதி தீர்ப்பை போராடி மத்திய அரசிதழில் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. பொய்யான வாக்குறுதிகளால் திமுக, ஆட்சியை பிடித்தது. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்குக்கான முதல் கையெழுத்து என்றார்கள் செய்தார்களா? திமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு நிலை என்ன? அதிமுக ஆட்சியில் பரிசுடன் ரூ. 2,500 கொடுத்தோம். இப்போது ஒரு பைசாகூட இந்த அரசால் கொடுக்க முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் யார் துரோகம் செய்தாலும் அதன் பலனை அனுபவிப்பார்கள். அதிமுகவில் சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக, முதல்வராக வர முடியும். வேறு கட்சியில் வர முடியுமா. இந்த 10 மாதத்தில் திமுக வேஷம் கலைந்துவிட்டது. பொய்யான வாகக்குறுதிகளை நம்பி திமுகவுக்கு வாக்களித்தார்கள் இப்போது அனுபவித்து கொண்டுள்ளனர்” என்றார்.