
தமிழகத்தில் 66 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பாணை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் விவாதம் நடத்த திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய தமிழக முதல்வர், ''நீங்கள் எல்லோரும் எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ அதுபோல் நானும்தான் அதிர்ச்சிக்கு ஆளானேன். செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசி, அதற்கு பிறகு பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தின் நகலை நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கக் கூடிய காரணத்தால் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு ஒரு பிரதி அனுப்பி உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து நம்முடைய எதிர்ப்பையும், நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் தர வேண்டும் என உத்தரவிட்டேன்.
அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். தொழில்துறை அமைச்சர் சொன்னதுபோல் சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளியூரில் இருக்கின்ற காரணத்தால் நேரடியாகச் சந்திக்க முடியவில்லை. இதனால் டி.ஆர்.பாலு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். பேசிய பொழுது தமிழக முதல்வர் அனுப்பி இருக்கும் கடிதத்திற்கு நிச்சயமாக நாங்கள் மதிப்பு கொடுப்போம் கவலைப்பட வேண்டாம் என்று உத்தரவாதத்தை ஒன்றிய அமைச்சர் சொன்னதாக டி.ஆர்.பாலு சொல்லியிருக்கிறார். ஆகவே நிச்சயமாக சொல்கிறேன், முதலமைச்சராக மட்டுமல்ல நானும் டெல்டாகாரன் தான். எனவே இதில் நான் உறுதியாக இருப்பேன். நீங்கள் எல்லோரும் எப்படி உறுதியாக இருக்கிறீர்களோ அதைவிட அதிகமாக உறுதியாக இருப்பேன்.” என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இதே டெல்டாகாரர் தான் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடிய மீத்தேன் திட்டத்தை கொண்டு வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டார். திறந்து வழிவிட்டார்கள். இப்பொழுது கஷ்டப்படுவதற்கு காரணமே அவர்தான்” எனக் கூறினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “மீத்தேன் திட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே திமுக தன் நிலைப்பாட்டை சொல்லியுள்ளது. ஏறத்தாழ 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு வரும் எனும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை 2011 ஜனவரி 4ல் திமுக அரசு மேற்கொண்டது. இத்திட்டத்தின் வாட் போன்ற வரிகள் மூலம் மாநில வருவாய் உயரும் என்பது மிக முக்கிய காரணமாக இருந்தது. அந்த ஒப்பந்தத்தில் கூட இந்த திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதிக்கப்படும் உழவர்கள் திட்டத்திற்கான எதிர்ப்பினை தெரிவித்தனர். அதிமுக அரசு விவசாயிகள் மீது ஏவிவிட்ட அடக்குமுறைகளில் ஈடுபடாமல் மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்புடன் இல்லாமல் அப்பொழுது விவசாயிகளின் குரலுக்கு திமுக அரசு செவிசாய்த்தது. அதிமுக பொறுப்பேற்று 2017ல் அதை ரத்து செய்வதற்கு முன்பே அதற்கான லைசன்ஸ் காலம் முடிந்து விட்டது. அதிமுக ரத்து செய்ததற்கு காரணமாக அமைந்தது திமுக சுற்றுச்சூழல் குறித்து கொண்டு வந்த சரத்து தான். திமுக ஆட்சியில் இருந்த வரை தமிழகத்தில் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
மீத்தேன் திட்டக்காலத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட அத்தனை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும் அனுமதி வழங்கியது அதிமுக அரசு தான். நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் வரை அனுமதி அளித்துவிட்டு முதலமைச்சரை பார்த்து ஏகடியம் சொல்வது எந்த வகையில் ஏற்புடையது. தன் மீது வந்திருக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் வகையில் திமுக மீது சேற்றை வாரி பூசும் இந்த செயலை அதிமுகவும் எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.