கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சத்யா பன்னீர்செல்வம். இவரது கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர். சத்யா பன்னீர்செல்வத்துக்கும் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கும் கடந்த 5 ஆண்டுகளாக ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. அதனால் அவருக்கு எதிரணியான கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரான அருண்மொழித்தேவனுடன் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு தலைமையிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், குறிஞ்சிப்பாடி முன்னாள் எம்.எல்.ஏவான சொரத்தூர் ராஜேந்திரனுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதன் பின்னணியில் அமைச்சர் சம்பத்தின் பங்கு இருப்பதாக கருதிய சத்யா பன்னீர்செல்வம், கட்சி தலைமையிடம் தனக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். பரிசீலிப்பதாக கூறி வந்த கட்சித் தலைமை, குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் பழனிசாமியை மாற்றிவிட்டு, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்துக்கு வாய்ப்பு வழங்கியது.
அதனால் தனது தொகுதியிலும் மாற்றம் ஏற்படும் என எண்ணியிருந்த சத்யா பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அது நடக்காததால் மேலும் ஏமாற்றமடைந்தனர். இதனால் விரக்தியடைந்த நிலையில் இருந்த சத்யா பன்னீர்செல்வம், அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும், அ.தி.மு.கவில் இருந்து விலகுவதாகவும் விடைபெறும் மடல் ஒன்றை வெளியிட்டார். அதில், தங்களது குடும்பச் சூழலைக் கருத்தில்கொண்டு பொது வாழ்விலிருந்தும் அரசியலில் இருந்தும் விடைபெறுவதாகவும், ஒத்துழைப்பு நல்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வி.சண்முகம், மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது. அதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பண்ருட்டியில் உள்ள சத்யா பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு குவிந்தனர். மேலும் ஒன்றியச் செயலாளர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி வார்டு கிளை நிர்வாகிகள் ஆகியோர் கட்சி பதவிகளைக் கூண்டோடு ராஜினாமா செய்தனர். சத்யா பன்னீர்செல்வம் வீட்டு முன்பாக ஆதரவாளர்கள் அமர்ந்து தர்ணா செய்தனர். மேலும் அங்கு செட்டிபாளையத்தைச் சேர்ந்த மணிமாறன் விரக்தியில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றபோது அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். பண்ருட்டி எம்.எல்.ஏவின் அரசியல் விலகல் அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களின் போராட்டமும் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.