
தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்திவரும் ஆளுநரின் செயலைக் கண்டிக்கும் வகையில் இந்த புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் கவனிப்பாரின்றி கிடக்கிறது. அப்படிப்பட்ட வேளையில், அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடக்கக்கூடிய தேநீர் விருந்து என்ற விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சட்டமன்ற மாண்பினை சிதைப்பதாகவும் அமைவதாலேயே அந்த விருந்தில் கலந்துகொள்ள முடியாத நிலை இந்த அரசுக்கு ஏற்பட்டது. மாண்புமிகு ஆளுநருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்தவித விரோதமும் இல்லை. தனிப்பட்ட முறையில் தமிழக ஆளுநர் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சரான எனக்கும் மிகமிக சுமூகமான உறவு இருக்கிறது. நேரில் பேசும்பொழுது இந்த ஆட்சியின் செயல்பாடுகளை மிகவும் பாராட்டி ஆளுநர் பேசியிருக்கிறார். ஆளுநர் பழகுவதற்கு இனிமையானவர். எங்களுக்கு அதிகமான மரியாதையை அவர் தருகிறார். ஆளுநர் என்ற முறையில் நாங்களும் அந்தப் பதவிக்கான மரியாதையை அளிக்கிறோம், தொடர்ந்து அளிப்போம்" எனத் தெரிவித்தார்.