
கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா எனக் குழப்பத்தில் இருந்ததாக அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது குறித்து பெரிய குழப்பத்தில் இருந்தேன். ஏனெனில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். முதல் தேர்தல்; தொகுதியில் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமானால் எனக்குப் பதிலாக இந்த தொகுதியில் நிற்க வேண்டியது மதன்மோகன் தான். நான் அவரிடம் சென்று என்னைத் தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள் எனச் சொன்னேன். அதற்கு அவர், நான் தேர்தலில் நின்று உழைப்பதை விட அதிகமாக உழைத்து உங்களுக்கு வெற்றி வாங்கித் தருகிறேன். நீங்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்லுங்கள் எனச் சொன்னார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது குறித்து திருவல்லிக்கேணிக்கும் சேப்பாக்கத்திற்கும் போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றது மதன்மோகன் தான்.
ஓரிரு தினங்கள் முன் சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து கழகத்தின் மாவட்டச் செயலாளர்களையும் பகுதி செயலாளர்களையும் வரச் சொல்லி இருந்தேன். சட்டமன்றத்தில் பேசுவதற்காக தொகுதியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து கேட்டேன். சட்டமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாய் எதற்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்ட பொழுது புதிது புதிதாக ஐடியா சொல்கிறார். லேடீஸ் ஜிம் வேண்டும் எனக் கேட்கிறார். ஏன் எனக் கேட்டபொழுது, தொகுதியில் எதிர்பார்க்கிறார்கள். செய்து கொடுக்க வேண்டும் என்கிறார். ஒவ்வொரு முறையும் என்னைச் சந்திக்கும் போதும் அவருக்காக எதையும் கேட்டது இல்லை. எல்லாவற்றையும் தொகுதிக்கும் கட்சிக்காரர்களுக்கும் தான் கேட்டுள்ளார்” எனக் கூறினார்.