கோவை மாவட்ட விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று (05-11-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஆளுநர் என்பது மத்திய அரசிடம் மாநில அரசின் தேவைகளை பேசி நிறைவேற்று தருபவர் தான். அவர்களை நான் நினைத்தது போல் எல்லாம் நடத்திட முடியாது. மேலும், தமிழக அரசு அனுப்பும் கோப்புகள் அனைத்திலும் ஆளுநர் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட முடியாது. ஆளுநருக்கும் ஒரு தனி அதிகாரம் உள்ளது. அதைத் தான் அவர் பயன்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதே போல், கேரளா அரசும் அம்மாநில ஆளுநர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக தான் இந்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருக்கிறது. ஆளுநர்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல், தமிழகமும், கேரளாவும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் ஊக்குவிக்கிறது. இதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்.
தமிழக அரசு பா.ஜ.க.வினரை தேடிப் பிடித்து வழக்கு போட்டு உள்ளது. வழக்குகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். எத்தனை வழக்குகள் போட்டாலும், நாங்கள் அதை சந்தித்து இன்னும் வேகத்துடன் செயல்படுவோம். அதனால், வழக்குகள் போட்டு எங்களை அடக்கிவிடலாம் என்று நினைக்க வேண்டாம்” என்று கூறினார்.