கரோனாவின் பிடியிலிருந்து உலக நாடுகள் இன்னமும் மீளவில்லை! மக்களை மீட்பதற்கான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஊரடங்கை உலக நாடுகள் அமல்படுத்தி வருகின்றன. இந்தியாவிலிருந்து மேற்படிப்புகளுக்காக பல்வேறு உலக நாடுகளுக்குச் சென்ற மாணவ-மாணவிகள், பொது முடக்கத்தால் அங்கேயே முடங்க வேண்டிய சூழல்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டே வருகிற நிலையில், அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியா மாணவ-மாணவிகள் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். இதனை அறிந்து, இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் எடுத்த முயற்சியில், அந்த மாநிலத்தின் மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சீனாவின் மேற்கு எல்லையைக் கடந்து உஷ்பெகிஸ்தான் நாட்டின் அருகில் உள்ள கிரிகிஸ்தான் நாட்டில் தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் தவித்து வந்த நிலையில், தமிழகம் தவிர்த்த மற்ற மாநில அரசுகள், மத்திய அரசின் உதவியுடன் தங்களுடைய மாணவ-மாணவிகளை தங்கள் மாநிலத்துக்கு வரவழைத்துக் கொண்டனர். ஆனால், தமிழக மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கிர்கிஸ்தான் நாட்டிலேயே பரிதவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழகம் வருவதற்கு உதவி செய்யுங்கள் என திமுக எம்.பி. கனிமொழியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் மாணவ-மாணவிகள். இது குறித்து அவர்கள் பேசும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இதனையறிந்து, கிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவ-மாணவிகளை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் கனிமொழி. இதற்காக, தனி விமானம் அனுப்பி அவர்களை மீட்பதற்காக மத்திய அரசிடம் பேசியுள்ளார்.