'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் தி.மு.க.வும், 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க.வும், 'ஒரு கை பாப்போம்' என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, 'வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்' என்ற தலைப்பில் பா.ஜ.க. தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் பா.ஜ.க.வின் நட்சத்திர பேச்சாளர் குஷ்பு, நெல்லை வந்தபோது, அவரின் தேர்தல் பரப்புரைக்கு பா.ஜ.க.வின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இந்த நிலையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, "கடந்த 6 ஆண்டுகளாகத் தமிழகத்திற்கு மோடி பல நலத் திட்டங்களை அறிவித்துள்ளார். அதன் காரணமாக, யார் நமக்கு நன்மைகள் செய்வார் என்று மக்கள் அறிவர். அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. குறித்த எந்தவிதக் குற்றச்சாட்டுகளோ, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளோ இல்லை. பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க.விடம் மரியாதை உள்ளது. மக்களைப் பற்றிய சிந்தனை உள்ள தலைவர்கள் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி தான். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்" என்றார்.
பின்னர் 'வெற்றிக் கொடி ஏந்தி தமிழகத்தை வெல்வோம்' என்ற தலைப்பில் நெல்லை டவுணில் பிரச்சாரத்தைத் தொடங்கினார் குஷ்பு. அப்போது அவர், பெண்களுக்காக மோடி அரசு செய்த திட்டங்களை எடுத்துச் சொன்னார். பிரச்சாரத்தின் போது, பா.ஜ.க.வின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நெல்லை மாநகர பா.ஜ.க. தலைவர் மகாராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.