இந்தியா முழுவதும், ராம பக்தர்கள் கடந்த 30 ஆம் தேதி ராம நவமியை கொண்டாடினார்கள். இதில் ஆந்திரா, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. ஆந்திராவில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் இருந்த மேற்கூரை பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக இதில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ம.பி. இந்தூரில் ஒரு கோயிலில் பழமையான கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 35 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
ஒருபுறம் விபத்துகள் ஏற்பட்டிருந்தபோது, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்தது. அதேபோல குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் வன்முறை நிகழ்ந்துள்ளது. இதில், ஹவுராவில் நடந்த கலவரத்திற்கு பாஜகவும் திரிணாமூல் காங்கிரஸும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், “2024-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறோம். பாஜகவினருடைய மேஜையில் வகுப்புவாத வன்முறை, வெறுப்பு பேச்சுக்கள், சிறுபான்மையினரைத் தூண்டிவிடுதல், அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையத்தை வைத்து எதிர்க்கட்சிகளைக் குறிவைத்தல் போன்றவை தயாராக இருக்கின்றன. மேற்கு வங்கம் பற்றி எரிவதும், கர்நாடகா, குஜராத்தில் கலவரம் புகைவிடத் தொடங்கி இருப்பதும் அதற்கான முன்னோட்டமே” என்று தெரிவித்துள்ளார்.