கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்திற்கு முன்னே ஒரு மாத காலத்திற்கு நீர் மோர் வழங்கும் பந்தல் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இதில் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் மக்களுக்கு நீர் மோர் வழங்கும் பணி செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பற்றி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக நீண்ட பதிலுரை ஒன்றைக் கொடுத்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் பட்டப்பகலில் நடந்து கொண்டு இருக்கும் படுகொலைகள் சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் இருக்கிறதா என்று கேள்வியை ஏற்படுத்துகிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம், மாற்றத்தை கொண்டு வரப்போகிறோம் என்றுதான் தமிழ்நாட்டிற்குள் வந்தார்கள். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கட்சி ஆரம்பித்த நீங்கள் காங்கிரஸ் போல் ஊழல் கட்சியுடன் சேர்ந்து கொண்டு திமுக உடன் சேர்ந்து கொண்டு மாற்றத்தை கொடுக்கப் போகிறேன் என்றால் உங்கள் அரசியல் கணக்கு என்ன? அவரை கட்சியின் தலைவராக பார்க்க முடியாது. ஊழல் கறை படிந்த காங்கிரஸ், திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர். இன்று அதுதான் அவர்களது நிலைமை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களையும் பிரச்சாரத்திற்கு அழைத்து வருகிறார்களோ அதுபோல் அவரையும் அழைத்து வந்து பிரச்சாரம் செய்து கொள்ளலாம்.
கர்நாடகத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியில் இருந்து ஒரு சிலர் வெளியில் சென்றுள்ளார்கள். அதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று ஒரு சில அரசியல் விமர்சகர்களும், ஊடகங்களும் கூறி வந்தன. ஆனால் களத்தில் நிலமை அப்படி இல்லை. பாஜக வித்தியாசமான கட்சி. எவ்வளவு பெரிய தலைவர்கள் கட்சியை விட்டுப் போனாலும் கட்சியின் தொண்டர்கள் அவரைப் பின்பற்றி செல்வதில்லை. தலைவர்களைப் பின்பற்றி உள்ள அரசியல் கட்சி அல்ல இது. அதனால் தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள்” எனக் கூறினார்.