நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக 7 மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றது. வேலூர் தொகுதியை தவிர்த்து நடந்த தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து பாமகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கக்கூடாது என அதிமுகவின் நிர்வாகிகள் சிலர் கட்சியின் தலைமையிடம் சொல்லி வந்தனர். ஆனால் பேசியப்படி ராஜ்யசபா பதவி கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சியின் தலைவர்கள் நிர்வாகிகளை சமாதானப்படுத்தி வந்தனர். இதனால் ராஜ்யசபா சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என் குழப்பத்திலேயே இருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இந்த நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெறாதது குறித்தும் பல கற்பனையான கதைகள், வதந்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. எந்த அனுமானத்திற்கும் பதில் சொல்ல முடியாது.
ஆனால் ஒன்றே ஒன்று நிச்சயம். அ.தி.மு.க. ஒரு ஜென்டில்மேன் கட்சி. எனவே ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் பா.ம.க.வுக்கு மேல்சபை சீட் வழங்குவது தொடர்பான அ.தி.மு.க. நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்தார். ஜெயக்குமாரின் பேட்டியால் நிம்மதி அடைந்துள்ளார் ராமதாஸ்.
அதேநேரத்தில் அவருக்கு இன்னொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. தர்மபுரியில் தோல்வியடைந்த அன்புமணிக்கு அந்த பதவியை அளிக்கலாம் என்று ராமதாஸ் நினைத்திருப்பதாகவும், தொடர்ந்து அன்புமணிக்கே சீட் கொடுக்காமல், கட்சியில் உள்ள மத்தவங்களையும் கவனிங்கன்னு ராமதாஸிடம் நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாகவும், இந்த முடிவை மாற்ற முடியாது என பாமக பிரமுகர்கள் முரண்டு பிடிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.