ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், சிவகங்கையில் நடைபெறும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டம் மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டமும் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பினர் காலை முதலே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “திமுக என்பது கம்பெனி. அந்த கம்பெனியில் ஸ்டாலின் சேர்மேனாக இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் டைரக்டராக உள்ளார். கனிமொழியும் டைரக்டராக உள்ளார். இவர்கள் தான் நாட்டை ஆண்டு கொண்டு உள்ளார்கள். ஒரு கம்பெனி தான் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது; கட்சி அல்ல; அரசாங்கம் அல்ல. ஆகவேதான் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. 22 மாத காலத்தில் மக்களின் விரோதத்தை சம்பாதித்த கட்சி என்றால் அது இந்தியாவிலேயே திமுக தான். வேறு எந்த கட்சியும் இல்லை. மக்களுக்கு நன்மை செய்தால் தானே மக்கள் எட்டிப் பார்ப்பார்கள். ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைப்பது தான் திமுக தலைவரின் எண்ணம்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒன்றும் நடைபெறவில்லை என சொல்கிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த பகுதியில் நடந்தவற்றில் சிலவற்றை சொல்லி ஆக வேண்டும். ஏனென்றால் ஒரு பொய்யை திமுகவினர் திரும்ப திரும்ப சொன்னால் மக்கள் சிந்திக்க முற்படுவார்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு என்ன செய்தோம் என நாங்கள் சொல்கிறோம். அதே போல் திமுக ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள் என்பதை மக்கள் கேள்வி கேட்பார்கள்” எனக் கூறினார்.