கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அமலாக்கத்துறை சட்டப்படி அதன் வேலையைச் செய்துள்ளது. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்த அவருக்கு திடீரென எப்படி நெஞ்சு வலி வரும். அமலாக்கத்துறையும், வருமானவரித்துறையும் வந்தால் நெஞ்சு வலி வருமா? தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் கீழ் இருக்கும் மருத்துவமனையில் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றுதான் சொல்லும். அதனால், அமலாக்கத்துறை எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து அவரது உடல்நிலையைப் பரிசோதித்து பின் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அமலாக்கத்துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஒருவரை முதலமைச்சர் சென்று சந்திப்பது என்பது சட்ட விதிகளை மீறும் செயல். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அவரை முதல்வர் நீக்கவில்லை என்றால் ஆளுநர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்றார்.