தமிழக உள்ளாட்சி தோ்தல் பிரச்சாரம் பரபரப்பாகிவரும் வரும் நிலையில், திருச்சி மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்களை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அறிமுகம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திருச்சி பீம்நகர் வார்டு கலைச்செல்வி கருப்பையா, மார்சிங் பேட்டை வார்டு துர்கா தேவி, பொன்நகர் வார்டு ராமதாஸ், கருமண்டபம் வார்டு மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியன், கிராப்பட்டி வார்டு கவிதா செல்வம், எடமலைப்பட்டி புதூர் வார்டு முத்துச்செல்வம் உள்ளிட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்திலேயே அதிகளவில் வாக்குகளை பெற்றது இந்த மார்சிங்பேட்டை பகுதியில் தான். கடந்த 3 முறையும் இந்த பகுதியில் தான் திமுகவிற்கான வாக்குகள் பதிவாகி உள்ளது. எனவே திருச்சியில் உள்ள சாலைகளை செப்பணிட 138 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தெளிவான குடிநீர் கிடைக்க புதிய குடிநீர் பைப்புகள் அமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனைகளை சீரமைத்தும் வருகிறோம். அதேபோல் திருச்சிக்கு 850 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும், சில்லறை வணிகர்களுக்கான பெரிய மார்கெட்டும் அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். அதற்காக முதல் தவணையாக 380 கோடி ரூபாய் நிதியும் தந்துள்ளார்.
திருச்சியில் புதிதாக கழிவறைகளை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதுவும் காசு கொடுத்து கழிவறைக்கு செல்லாமல் இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு அந்த பணிகள் துவங்கும் என்று கூறினார். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். சென்னைக்கு நிகராக திருச்சியை விரிவுபடுத்தி லால்குடி, சமயபுரம், தாயகுனூர் உள்ளிட்ட பகுதிகள்வரை மாநகர எல்லையாக விரிவுபடுத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 200 வார்டுகள் அடங்கிய எல்லையை கொண்டது. அதேபோல் திருச்சியும் அதே அளவிற்கான வார்டுகளை கொண்ட பெரிய நகரமாக மாறும், கோட்டங்கள் அளவில் இருக்கக்கூடிய பகுதிகளில் மின்மயானங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் தந்த பகுதி இந்த மார்சிங்பேட்டை, எனவே இங்கு போட்டியிடும் துர்கா தேவியின் வெற்றி உறுதி என்பது எனக்குத் தெரியும். இந்த முறையும் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.