2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மூலம் முயற்சி செய்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
ஆனால் கடம்பூர் ராஜூ காட்டிய கெடுபிடியால் சின்னப்பனை வேட்பாளராக நிறுத்தியது கட்சித் தலைமை. இதனால் அப்செட்டான மார்க்கண்டேயன் சுயேட்சையாக களமிறங்கி ஆளுந்தரப்புக்கு குடைச்சலைக் கொடுத்தார்.
அதிமுக, திமுக, அமமுக என இந்த மூன்று கட்சிகளின் போட்டிக்கு நடுவே, டோக்கன் சிஸ்டம் மூலம் 27,456 வாக்குகள் பெற்று தன் செல்வாக்கைக் காப்பாற்றினார் மார்க்கண்டேயன். தோற்றப்பிறகும், டோக்கனுக்கான 200 ரூபாய் விநியோகம் நடக்கிறதாம். இன்னொருபுறம் தன்னுடைய அரசியல் வாழ்வு அஸ்தமிக்கக்கூடாது என்பதற்காக, தனிமர நிலையில் இருந்து அதிமுகவுக்குத் தாவ அமைச்சர்களின் பி.ஏ.க்களிடம் நூல் விட்டிருக்கிறார் மார்க்கண்டேயன்.
ஆனால் அவர் மீதான கோபமோ தலைமைக்கு இன்னும் குறையவில்லை. இதனால் தனது அரசியல் எதிர்காலம் நிலைக்க, கரூர் செந்தில்பாலாஜியைப்போல, திமுகவில் இணையும் வேலைகளில் இறங்கிவிட்டாராம். இதற்காகவே திருச்சி, விருதுநகர் திமுக புள்ளிகளைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறாராம். விளாத்திக்குளத்தில் திமுகவுக்கு வலுவான புள்ளி தேவை என்ற யோசனைக்கு வந்துள்ளதாம் தலைமை. எண்ணிப் பதினைந்தே நாட்களில் நல்லசேதி வரும் என்று தன் ஆதரவாளர்களிடம் உறுதியாகச் சொல்கிறாராம் மார்க்கண்டேயன்.