'மது ஒழிப்பு மாநாடு, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு' என விசிகவின் தலைவர் திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடு கூட்டணியில் பேசுபொருளாகியுள்ளது. இந்த சிக்கல்களுக்கு இடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்ட போது மதுரையில் கே.புதூர் பகுதியில் அக்கட்சியின் தலைவரான திருமாவளவனால் முதல்முறையாக ஏற்றப்பட்ட 20 அடி கொடிக்கம்பம் அண்மையில் வருவாய்துறை மற்றும் காவல்துறையால் அகற்றப்பட்டிருந்தது. இதற்கு விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதே இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் வைக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொடிக் கம்பத்தின் உயரத்தை 62 அடியாக உயர்த்தி மீண்டும் அதே இடத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்ட நிலையில் அங்கு திருமாவளவன் கொடியேற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,''கொடியேற்றுவதே விசிகவிற்கு போராட்டமாக உள்ளது. மக்களுக்காக போராடினாலும், மையத்தில் அரசியல் செய்தாலும் கொடியேற்றுவது இன்னும் போராட்டமாகவே உள்ளது. தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக விசிக உள்ளது. தமிழகம் மட்டுமன்று வட மாநிலங்களிலும் விசிக கொடி பறந்து கொண்டிருக்கிறது. ஒரு மாநிலக் கட்சியாக மாறிய பின்பும் சவால் மற்றும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். 'கொள்கையை வெல்ல களமாடுவோம்; கோட்டையில் ஒருநாள் கொடி ஏற்றுவோம்' என விசிகவின் வெள்ளி விழாவில் பேசினேன். விசிக கொடி கொள்கை சார்ந்த கொடி, சமூகநீதி, சமத்துவத்திற்கான கொடி'' என தெரிவித்துள்ளார்.