திமுக தலைமையிலான அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் இன்று (17.12.2021) அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதேபோல், கடந்த தேர்தலில் மக்களுக்குத் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலே காவல்துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் இதுவரை 557 கொலைகள் நடந்துள்ளது. இன்று மக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. சட்ட ஒழுங்கைப் பேணி காக்கின்ற அரசாங்கம் இன்று அதில் தோல்வி அடைந்துள்ளது. போலீஸ்காரருக்கே பாதுகாப்பில்லை. நம்மைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கே இன்று பாதுகாப்பில்லை'' என்றார்.
அதேபோல் தேனி மாவட்டம் பங்களா மேட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஓபிஎஸ் பேசுகையில், ''சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள், இல்லையென்றால் மக்களுடைய போராட்டம் வீதிக்கு வரும். அப்பொழுது உங்கள் ஆட்சி வீழும் என்ற நிலைமை மக்களால் உருவாக்கப்படும். வாக்குறுதிகளை சொன்னபடி நிறைவேற்றவில்லை என்றால் ஆட்சி தானாகவே சேர வேண்டிய இடத்தில் போய்ச் சேரும். யாரிடம், எங்களிடம்தான்'' என்றார்.
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''பெருமழை பொழிந்து பல இடங்களில் மழை நின்றும்கூட நிறைய இடங்களில் தண்ணீர் நிற்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதியிலேயே இடுப்பளவு தண்ணீர் நிற்கிறது என்று சொன்னால், தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கு, மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் எங்கும் எதிலும் ஊழல் என்ற அடிப்படையில்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது' என்றார்.