தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மாணவர்கள் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கின்றனர்.
அதே சமயம் இந்த தேர்வின் முடிவு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் வெளியிடப்பட்டும் என டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் குருப் - 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. மேலும் குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. இன்று (11.09.2024) தெரிவித்திருந்திருந்தது. இதன் மூலம் ஏற்கனவே 6224 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில் டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 224லிருந்து, 6 ஆயிரத்து 704 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆட்சிக்கு வருவதற்காகச் சொன்னது அத்தனையும் பொய் என்ற ரீதியில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட திமுக அரசு, அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தொகுப்பில் 20 ஆயிரம் இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப் - 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.