அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் என்ற பெயரில் அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கூடாது எனக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பும், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்திலும் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பு ஆதரவாளர்கள் பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று தீவிர நடவடிக்கைகளையும், ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் இருக்கும் உறுப்பினர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு போலி அடையாள அட்டையுடன் பலர் வந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், இந்த நடவடிக்கையை அதிமுக தலைமை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.