வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுகக் கூட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “யாராக இருந்தாலும் அண்ணா பேரை சொன்னால் தான் தமிழகத்தை ஆள முடியும்.
தி.மு.க.வை நசுக்கிடுவோம் என மோடி பேசுகிறார், நாங்கள் என்ன மகாபலிபுரம பாறையா நசுக்க. நாங்க படா படா ஆள் இல்லை சார், சோட்டா சோட்டா ஆளுங்க எங்கள ஒன்னும் பண்ண முடியாது. ராஜகோபால ஆச்சாரியர் எங்களை மூட்டை பூச்சி போல் நசுக்குவேன் என்றார் அவரையே நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து மூட்டை கட்டி அனுப்பிவிட்டோம்.
லால்பகதூர் சாஸ்திரி, தனிநாடு கேட்டால் கட்சியை தடை செய்வேன் என்றார். அதை சாமர்த்தியமாக முறியடித்தவர் அண்ணா. அண்ணாவை மட்டும் கலைஞர் சந்திக்காமல் இருந்திருந்தால் கலைஞர் கம்யூனிஸ்ட் வாதியாகி இருந்திருப்பார். அவர் ஒரு சமூகநீதிக்காரர். இதை அண்ணாவே சொல்லி இருக்கிறார்.
நான் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் சங்கத்திலிருந்து அப்போது கல்லூரி சார்பில் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தார்கள். நான் இதனை உடனடியாக கலைஞரிடம் போய் சொன்னேன். அதற்கு கலைஞர், ‘எம்.ஜி.ஆர். திரையில் ஆற்றிய தொண்டுக்கு டாக்டர் பட்டத்திற்கு மிக பொருத்தமானவர். நீயே அதை முன்மொழிந்து செய்ய வேண்டும்’ என சொன்னார். இதை அப்படியே எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது, ‘தலைவரா அப்படி சொன்னார்’ என மிக உருக்கமாக பேசினார் எம்.ஜி.ஆர். அப்படி எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்பதை தடுத்து வழங்கச் செய்தவர் கலைஞர்.
தி.மு.க.வை பார்த்து நசுக்கி விடுவேன் உடைத்து விடுவேன் என பேசுகிறார் பெரியவர் மோடி. தி.மு.க.காரன் வெளியில் வரும்போது வாயில் வாய்க்கரிசியைப் போட்டுக் கொண்டு வருபவன். எதற்கும் துணிந்தவன். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் ஏன் சொன்னதையே திரும்ப திரும்ப மேடைகளில் சொல்கிறோம் என்றால். திரும்பத் திரும்ப சொல்லவில்லை என்றால் சீதைக்கு சித்தப்பா ராவணன் என்று விடுவார்கள்” எனப் பேசினார்.