திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கடந்த 3 ஆண்டில் 2 ஆயிரத்துக்கும் மேலான டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று செய்வது வேறு என அ.தி.மு.க. போட்டு வரும் இரட்டை வேடம் இது’, என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மதுவிலக்கு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘தமிழகத்தில் மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர மதுக்கடைகளை திறப்பது அல்ல!’ என கூறியுள்ளார்.
மற்றொரு பதவில், ‘தமிழகத்தில் மதுக்கடைகள் எண்ணிக்கை கூடிவிட்டது. படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு என்ன ஆனது? மு.க.ஸ்டாலின்- சரி தான். அதேபோல திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையும் ஒன்று கூடிவிட்டது. மது ஆலைகளை மூடுவதாக 2016-ல் திமுக அளித்த வாக்குறுதி என்னவானது என்பதையும் கேளுங்கள்!’ என குறிப்பிட்டுள்ளார்.