திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடைபெற்ற தி.மு.க.வின் தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் எதிர்காலமாக தி.மு.க.வின் திருச்சி பொதுக்கூட்டம் அமைந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது. கடலளவு தி.மு.க. செய்துள்ள சாதனைகளைச் சொல்ல தனி மாநாடுதான் போட வேண்டும். தி.மு.க. உருவாக்கிய அடிப்படை கட்டமைப்பை சிதைப்பது அ.தி.மு.க. ஆட்சியின் பழக்கமாக இருந்தது. மே 2- ஆம் தேதி தமிழகத்திற்கான புதிய விடியல் பிறக்கும். தமிழகத்தின் முக்கியமான ஏழு துறைகளை வளர்த்தெடுப்பதே தி.மு.க. ஆட்சியின் நோக்கம். அதன்படி, பொருளாதாரம், நீர்வளம், வேளாண்மை, கல்வித்துறையை வளர்த்தெடுப்பதே முக்கிய நோக்கம் ஆகும். சமூகநீதி, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக கட்டமைப்புத்துறையை வளர்த்தெடுப்பதும் நோக்கமாகவுள்ளது.
கல்வி, சுகாதாரத்திற்கு செலவிடப்பட்டு வரும் நிதி மூன்று மடங்கு உயர்த்தப்படும். அனைவருக்கும் உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூபாய் 35 லட்சம் கோடியை தாண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும். தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூபாய் 4 லட்சத்திற்கும் மேலாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். வறுமையில் வாடும் ஒரு கோடி பேரை மீட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். வீணாகும் நீரின் அளவை 50%-ல் இருந்து 15% ஆக குறைக்க உறுதிப் பூண்டுள்ளோம். தனிநபர் பயன்பாட்டுக்கான நீர் இருப்பை ஆண்டுக்கு 9 லட்சம் லிட்டரில் இருந்து 10 லட்சமாக உயர்த்துதல். பசுமைப் பரப்பளவை 20.27%-ல் இருந்து 25% ஆக உயர்த்த 7.5 லட்சம் ஹெக்டேர் நிலம் கூடுதலாக இணைக்கப்படும். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகைகள் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு பின்னர் நடந்த தி.மு.க.வின் முதல் மாநில பொதுக்கூட்டம் இது. இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என்ற பெயரில் தொலைநோக்கு திட்டம் வெளியீடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.