திமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த குடியாத்தம் குமரனை கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலும் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது திமுக தலைமை. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பெயரில் வெளிவந்துள்ள அந்த அறிக்கை செப்டம்பர் 25ந் தேதி மதியம் வெளியிடப்பட்டுள்ளது. இது வேலூர் மாவட்ட திமுகவினருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுப்பற்றி வேலூர் மாவட்ட திமுக தரப்பில் விசாரித்தபோது, குடியாத்தம் குமரன், இரண்டாம் கட்ட பேச்சாளராக கட்சியில் வலம் வந்தவர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலத்தில் என சரளமாக மேடையில் பேசுவார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் திமுக பொருளாளர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக தன்னை நேற்று வரை அடையாளம் காட்டிக்கொண்டுயிருந்தார். வேலூர் எம்.பி தேர்தலில் போட்டியிட்ட துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்துக்காக தொகுதியில் வலம் வந்து பிரச்சாரமும் செய்தார்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு உள்ளுர் கட்சி நிர்வாகி ஒருவர் குடியாத்தம் குமரனிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். உள்கட்சி விவகாரம் தொடர்பாக பேச்சு வந்துள்ளது. அப்போது கோபத்தில் துரைமுருகனைப் பற்றி பேசியுள்ளார். துரைமுருகன் பற்றி பேசும்போது வார்த்தைகளை தாறுமாறாக வெளியிட்டுள்ளார். அதை கேட்டு எதிரே பேசியவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த உரையாடலை செல்போனில் டேப் செய்துள்ளார் அந்த முக்கிய உள்ளுர் பிரமுகர். அதனை செப்டம்பர் 24ந் தேதி துரைமுருகன் தரப்புக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவை போட்டு காட்ட, குமரன் சொன்ன வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியாகியுள்ளார் துரைமுருகன்.
அந்த முழு ஆடியோவும் அப்படியே திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளரை இப்படி பேசலாமா என அதிர்ச்சியாகியுள்ளார். இதன் பிறகே தற்காலிகமாக நீக்கம் உத்தரவு வந்துள்ளது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.