புதுக்கோட்டை அர்பன் வங்கி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க எடப்பாடி தரப்பு மட்டும் உள்ளே நுழைந்து வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அ.தி.மு.க ஒ.பி.எஸ். அணி, தி.மு.க, அ.ம.மு.க அணிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த பிரச்சனையில் செங்கல் கொண்டு அ.தி.மு.க வினர் தாக்கியதில் தி.மு.க இலங்கிய அணி கவிதைப்பித்தன், ராசேந்திரன், காவல் உதவி ஆய்வாளர் யோக ரெத்தினம் உள்பட பலர் காயமடைந்தனர். அதன் பிறகு வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது தேர்தல் அதிகாரி பின்வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று கூட்டுறவு சங்க தேர்தல்கள் முறைப்படி நடக்காமல் அ.தி.மு.கவினருக்கு மட்டும் சாதகமாக நடக்கிறது. அதனால் புதுக்கோட்டை மாவட்டம் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க வழக்கறிஞர்கள் புதுக்கோட்டை மா. செக்கள் பொறுப்பு தெற்கு ரகுபதி எம்.எல்.ஏ, வடக்கு செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் தி.மு.க வினர் மனுவோடு வருவதை அறிந்த இணைப்பதிவாளர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனால் தி.மு.க வினர் நீண்ட நேரம் அதிகாரி வருகைக்காக காத்திருந்தனர். அதிகாரி வரவில்லை. ஆனால் போலிசார் வந்தனர். அதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தி.மு.க வினர் வெளியே செல்ல முயன்ற போது வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர்.
சட்டவிரோதமாக கைது செய்யபட்டுள்ளனர் என்று தி.மு.க வழக்கறிஞர்கள் மாவட்ட எஸ்.பி. செல்வராஜிடம் மனு கொடுத்தனர். ஆனால் மாலை வரை வைக்கப்பட்டிருந்தவர்களை மாலையில் விடுதலை செய்துள்ளனர்.
அமைதியாக மனு கொடுத்து நியாயம் கேட்க சென்றால் கூட வலுக்கட்டாயமாக கைது செய்யும் போலிசார் மூன்று நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க வினரின் அராஜக கல்வீச்சில் போலிசார் வரை கை உடைந்தது. அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஆளும்கட்சிக்காக காவல் துறை செயல்படுகிறது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்றனர் தி.மு.கவினர்.