தி.மு.க. வழக்கறிஞர் அணியின் கூட்டம் மண்டலம் வாரியாக நடைபெறத் துவங்கியுள்ளது. அதன்படி திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் திருவண்ணாமலை நகரில் உள்ள தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மா.செ எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, தாலுக்கா வழக்கறிஞர் அணியின் நிர்வாகிகள், தலைமை வழக்கறிஞர்கள் அருண், கோ.இரா.மணிமுடி, தாமோதரன் ஆகியோர் என சுமார் 200 வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தி.மு.க வழக்கறிஞர் அணிச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி, கலந்துகொண்டு பேசும்போது, தேர்தல் நெருங்கிவரும் சூழலில், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க அரசாங்கம், தி.மு.க நிர்வாகிகளுக்குத் தரும் நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்வது, தேர்தல் பிரச்சனைகள், வழக்குகளை எப்படி அதிகாரிகளிடம் கொண்டு செல்வது, உடனுக்குடன் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு ஆளும்கட்சிகள் தவறு செய்யாமல் தடுக்க வேண்டியது உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பணி குறித்து விளக்கமாகப் பேசினார்.
அதோடு, வாக்காளர் பட்டியலில் குளறுபடியிருப்பின், அதனை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுசென்று சட்டப்படி அதனைத் தீர்க்க வேண்டும் என்றவர், ஒவ்வொரு வழக்கறிஞரும், ஒவ்வொரு பூத் கமிட்டியையும் கண்காணிக்க வேண்டும். இந்தத் தேர்தல் நமக்கு முக்கியமானது. நம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை, மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வும் அதிகாரத்தை வைத்து பொய் வழக்குகளைப் புனைந்து முடக்க நினைப்பார்கள், அதனைத் தடுக்க வேண்டியது வழக்கறிஞர் அணியின் கடமை என்றார்.
இதற்கு முன்னதாக வழக்கறிஞர் அணியின் கூட்டத்துக்கு வந்திருந்த 8 மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களான இராணிப்பேட்டை ஆர்.காந்தி எம்.எல்.ஏ, வேலூர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, வேலூர் மாநகரச் செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ, கள்ளக்குறிச்சி மாவட்டம் தெற்கு மா.பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, வடக்கு மா.செ ப.உதயசூரியன் எம்.எல்.ஏ, திருப்பத்தூர் மா.செ க.தேவராஜ், திருவண்ணாமலை வடக்கு எம்.எஸ்.தரணிவேந்தன், தி.மு.க. தணிக்கைக்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.