ஈழத்தில் தொடரும் இனவெறி தாக்குதலில் இருந்து தமிழர்களைக் காக்க ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் தொடர்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியிருக்கிறது. போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைக்கு எந்த வகையிலும் உதவாத சிங்கள அரசு, தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்வது கண்டிக்கத்தக்கதாகும்.
ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 23&ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதிய அறிக்கை ஒன்றை நேற்று முன்நாள் வெளியிட்டிருக்கிறது. இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதற்கும் தீர்வு கிடைக்காத நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிலைமை மோசமடைந்து இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
போர்க்குற்றங்களை இழைத்தவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் அவர்கள் தமிழர்களுக்கு எதிரான குற்றங்களை மேலும், மேலும் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். குடிமைப் பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் 31 அமைப்புகளை இலங்கை இராணுவம் தான் நிர்வகிக்கிறது. காவல் துறையின் பணிகளையும் இராணுவமே மேற்கொள்வதால் வடக்கு மாநிலத்தில் வாழும் தமிழ்ப் பெண்கள் கொடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் புத்தமத பாரம்பரிய சின்னங்களைக் காப்பது, காடுகளை காப்பது என்ற பெயரில் தமிழர்களுக்கு சொந்தமான ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. 2021&ஆம் ஆண்டு நவம்பர் வரை நிலம் சார்ந்து 45 மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்து ஆலயங்களில் புத்தர் சிலை சட்டவிரோதமாக நிறுவப்படுகிறது.
தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் என்பன உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் அதிர்ச்சி அளிப்பவையாகும்.
போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாங்களாகவே நடவடிக்கை எடுக்கப் போவதாக 2 ஆண்டுகளுக்கு முன் மனித உரிமைப் பேரவையில் வாக்குறுதி அளித்த இலங்கை, அதை நிறைவேற்றவில்லை. மாறாக, தமிழர்களை அச்சுறுத்தி அடிமைப்படுத்தும் பணிகளைத் தான் செய்து வருகிறது. தமிழர்களின் நிலங்களை பறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது, அவர்களை அவர்களின் சொந்த பூமியிலிருந்து வெளியேற மறைமுகமாக அழுத்தமும், மிரட்டலும் விடுப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. பன்னாட்டு விதிகளின்படி இவையும் இனப்படுகொலைக்கு ஒப்பான செயல்கள் தான் என்பதில் ஐயமில்லை.
மன்னிக்க முடியாத அளவுக்கு போர்க்குற்றங்களை இழைத்த ஒரு நாடு, அது குறித்த குற்ற உணர்வே இல்லாமல் தொடர்ந்து இனவெறித் தாக்குதல்களை நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதிலும் குறிப்பாக உணவுக்கும், எரிபொருளுக்கும் வழி இல்லாமல் தவிக்கும் இலங்கைக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் இந்திய அரசு, இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் குற்றச்சாட்டை வேடிக்கை பார்க்கக் கூடாது. இலங்கைக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்காமல், அதன் இனவெறித் தாக்குதல்களைத் தடுக்காமல் உதவிகளை மட்டும் வழங்குவது இலங்கையின் செயல்களுக்கு இந்தியா துணை போவதாகவே பார்க்கப்படும்.
பொதுவான கடமைகளைக் கடந்து ஈழத்தமிழர்களின் தந்தை நாடு என்ற வகையில், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் சிறப்புக் கடமையும் இந்தியாவுக்கு உண்டு. அதனால், ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது; ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும். அதைத் தான் உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை வரும் மார்ச் 3ஆம் தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது. இந்த விவாதத்தில் இந்திய அரசின் பிரதிநிதி கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டும். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதையும், இலங்கை இனச் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவும் தெற்காசிய சக்தி என்ற முறையில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.