பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பின் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.
அமெரிக்கப் பயணத்திட்டத்தின் படி நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். முன்னதாக வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். இதனை அடுத்து பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் பிரதமரின் பயணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பிரதமரின் அமெரிக்கப் பயணம், பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல ஒப்பந்தங்களை செய்துகொண்டன. செமிகண்டக்டர் சப்ளை செயின் மற்றும் இன்னோவேஷன் பார்ட்னர்ஷிப் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆராய்ச்சியை மட்டுமல்ல, வணிக வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும்” என்றார்.
அதேபோல் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்து வருகிறது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் குறித்தும் ஸ்மிருதி இராணியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பிரதமர் மோடியை தங்களால் தனியாக தோற்கடிக்க முடியாது என்றும், அதற்கு மற்றவர்களின் ஆதரவு தேவை என்றும் பகிரங்கமாக அறிவித்த காங்கிரஸுக்கு எனது நன்றி” என தெரிவித்துள்ளார்.