சிவகங்கையில் இன்று (22.01.2025) நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் 51 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் 46 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். 164 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போடும் எல்லா கணக்கும் தப்புக் கணக்கு தான்.
மக்கள் எங்களுடைய செயல்பாடுகளையும் மக்கள் நலத்திட்டங்களையும் கணக்குப் போட்டு முதல் மதிப்பெண் கொடுக்கிறார்கள். எங்களுக்கு அது போதும். மற்றொன்றும் சொல்கிறார் தி.மு.க. ஆட்சிக்கு 13 அமாவாசைகள் தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு காலெண்டரை கிழித்துக்கொண்டு இருக்கிறார். அதுதான் இப்போது அவருடைய வேலை. அவர் இருட்டில் உட்கார்ந்து அமாவாசையை எண்ணிக்கொண்டு இருக்கிறார். இருக்கட்டும் பரவாயில்லை. நாம் மக்களுக்கான நன்மைகளை எண்ணி, திட்டங்களைச் செயல்படுத்துவோம். மக்களுடைய மகிழ்ச்சியை மட்டும் எண்ணிப் பார்ப்போம்.
நேற்று நான் சிவகங்கைக்கு வந்ததிலிருந்து மக்கள் கொடுத்த வரவேற்பையும். அவர்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியையும் பார்க்கும்போது, உதயசூரியன் ஒளியில், தொடர்ந்து தமிழ்நாட்டை தி.மு.க. தான் என்றும் ஆளும்” எனப் பேசினார். இந்த விழாவில், அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ. தமிழரசி, எஸ்.மாங்குடி, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.