Published on 17/09/2019 | Edited on 17/09/2019
கடந்த மாதம் 21-ம் தேதி ப.சிதம்பரம் சிபிஐ யால் கைது செய்யப்பட்டார். 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை 14 நாட்கள் திகார் சிறையில் வைக்க கடந்த 5 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. கார்த்திக் சிதம்பரம் இருந்த அதே அறை எண்.7ல் சிதம்பரம் சிறை வைக்கப்பட்டார். சிறையில் தன் மனைவி நளினி கொடுத்த கம்பராமாயணத்தையும், சில ஆங்கில நூல்களையும் ப.சிதம்பரம் படித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர். அதோடு வெளியில் என்ன நடக்கிறது என்பதை அடிக்கடி விசாரித்து தெரிந்துகொள்கிறாராம். இந்த நிலையில் திஹார் ஜெயிலில் வாரம் ரூ.1500 மட்டும் தனது குடும்பத்தினர்களிடம் இருந்து செலவுக்கு சிதம்பரம் பெற்று வருவதாக கூறுகின்றனர்.
அதாவது, சிறையில் கொடுக்கும் உணவுகளையே ப.சிதம்பரம் சாப்பிட்டு வந்தாலும், சிறையில் பயன்படுத்தும் டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை வாங்க ப.சிதம்பரம் வாரம்தோறும் 1,500 ரூபாயைத் தனது குடும்பத்தினரிடம் இருந்து பெற்று வருவதாக திஹார் ஜெயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து திகார் சிறைக்காவலர்கள் கூறும் போது, சிறை கைதிகள் செலவுக்காக தனது குடும்பத்தினரிடம் வாரம் 1500 பெற்று கொள்ளமுடியும். அதை சிறைக் கைதிகள் நல நிதியில் சேர்க்கப்பட்டு அதை வங்கி போல் டெபாசிட் செய்துகொள்ள முடியும். இதற்காகத் தனி கார்டு கொடுக்கப்படும். அந்த கார்டை பயன்படுத்தி சிறையில் உள்ள கேன்டீன்களில் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளனர். இந்த விதிமுறையே சிதம்பரத்திடமுடம் கடைப்பிடிக்கிறோம் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.