அ.தி.மு.க., பா.ஜ.க. இரு கட்சிகளும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து தொடர்ந்து கூட்டணியில் இருந்துவருகின்றன. இந்நிலையில், தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரு தரப்புக்குமான பேச்சு வார்த்தை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
இந்நிலையில், நேற்று இரவு அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், பா.ஜ.க., தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்து பாஜக தேசிய தலைமைக்கு முழுமையான தகவலை அனுப்பி உள்ளது. அதில், "அ.தி.மு.க.விடம் இருந்து திருச்சி, கோவை, நாகர்கோவில், ஒசூர், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சியில் 30%ல் இருந்து 35% இடத்தை கேட்டுள்ளோம். அதேபோல மீதம் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் 20% இடங்களை கேட்டுள்ளோம். அதில் அ.தி.மு.க. 10% இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது.
இருந்த போதிலும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் நாங்களும் தேர்தலில் போட்டியிட மாநில தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்" என அதில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் போட்டியிட பாஜக யூகித்துள்ளதாகவும், அதில் 20% வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. மாநில தலைமை தயார் செய்துள்ளதாகவும், அதனை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கும் என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், இன்னும் கூட்டணி குறித்து முழுமையான பேச்சுவார்த்தை முடியாத நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென சேலத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.