தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 25.06.2020 வியாழக்கிழமை கோவை மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது தமிழக அரசும் மத்திய அரசும், மருத்துவத் துறையும் அறிவிப்பு செய்யும்படி தனிமனித இடைவெளி என்ற சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அவரின் கூட்டம் நடக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி உள்ளார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நசியனூர் பகுதியில் அன்று மாலை அவினாசி அத்திக்கடவு திட்ட ஆய்வுப் பணியை எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். அப்போது அங்கு குறைந்தபட்சம் சுமார் 300 பேருக்கு மேல் வந்திருந்தார்கள். அவரது நிகழ்ச்சி மேடையில் ஏறக்குறைய 50 பேருக்கு மேல் சமூக இடைவெளி இல்லாமல் நின்று கொண்டிருந்தார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள், அதிகாரிகள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு விளம்பரத்திலும் 'விழித்திரு, வீட்டில் இரு, விலகிஇரு' எனக் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் அவர் உத்தரவிட்டுருக்கவேண்டும் ஆனால் அப்படிச் செய்யவில்லை. இது வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியாக அதாவது கரோனா காலத்திற்கு முன்பு எப்படி ஒரு அரசு விழா நடக்குமோ அது போலத்தான் நடந்தது, இதில் முதல்வர் வரும்போதும் பிறகு அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் அடுத்து அவர் செல்லும் போதும் அந்தக் கூட்டம் நெருக்கடியில் சிக்கித் தவித்தது.
ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்று கூறும்போது ஒரு மாநில முதல்வரே இப்படி ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா? அல்லது அந்தக் கூட்டத்தில் தனது கட்சிக்காரர்களை இப்படி அனுமதிக்கலாமா? எனக் கேள்விகளைச் சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளார்கள்.