சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக முன்னோடி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர்,
பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு எது பிடிக்காது என்று கேட்டீர்கள் என்றால், சோசலிசம் பிடிக்காது ஜனநாயகம் பிடிக்காது, மதச்சார்பின்மை பிடிக்காது. இது தான் பிரதமருடைய வேலை, இந்த பிரதமராக இருக்கக்கூடியவர் பற்றி, நான் கூட அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிற போது எடுத்துச் சொன்னேன். என்னவென்று கேட்டீர்கள் என்றால், வெளிநாடு வாழ் இந்தியர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதுபோல், வெளிநாடு வாழ் பிரதமர் யார் என்று கேட்டீர்கள் என்றால் மோடி தான் இதுவரைக்கும் பிரதமராக வந்து அவர் செய்துள்ள சாதனை உலகத்திலேயே பிரதமராக இருந்து மோடிதான் 84 நாடுகளுக்கு போய்வந்த நேரத்திலே அவருக்காக செலவு செய்த தொகை ஏறக்குறைய 1500 கோடி ரூபாய், அது அவர் சொந்த பணமா? மக்களுடைய வரிப்பணம் தயவு செய்து மறந்துவிடக்கூடாது.
போகிற பிரதமர் அந்த நாட்டிற்கு சென்று இந்த காரியத்தை செய்திருக்கிறார். அந்த நாட்டில் இருந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்திருக்கிறார். அதனால், இந்தியா இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு போய் அவர் சுற்றுப்பயணம் செய்து வந்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன்.
உலகம் சுற்றும் வாலிபனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். இன்றைக்கு உலகம் சுற்றும் பிரதமராக மோடி அவர்கள் விளங்கி கொண்டிருக்கிறார். இது தான் இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலை இதை எல்லாம் நீங்கள் மறந்துவிடக்கூடாது. இன்றைக்கு நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டம் - ஆர்பாட்டம் விவசாயிகள் ஒருபக்கத்தில் - தொழிலாளர் தோழர்கள் ஒருபக்கத்தில் - அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் - சத்துணவு அமைப்பாளர்கள் ஒரு பக்கம்.
இன்றைக்கு வந்திருக்கிற செய்தி என்னவென்று பார்த்தீர்கள் என்றால், 1100 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்படப்போவதை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய 5 லட்சம் ஊழியர்கள் அதில் இருக்கிறார்கள். 5 லட்சம் ஊழியர்கள் அதனால் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வியாபாரம் செய்ய முடியாத அளவிற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இன்றைக்கு சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் இன்றைக்கு தங்களுடைய தொழிலைக்கூட செய்யமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனையை யார் தீர்த்து வைக்க வேண்டும். அரசு பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள். மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக தலையிட்டு அவர்களை அழைத்து உட்கார வைத்து பேசி ஒரு சுமுகமான தீர்வு ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கூடிய இந்த சிக்கல்களில் இருந்து அவர்களை தப்பிக்க வைக்க இந்த அரசு முற்படுகிறதா என்றால் இல்லை. அவர்களைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைபட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
மத்தியில் பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்களுடைய நினைவெல்லாம் அதானி – அம்பானி. இங்கு இருக்கக்கூடியவர்களுடைய நினைவெல்லாம் கமிஷன் – கலெக்சன் – கரெப்சன். அறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு கற்றுத் தந்தது கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு. ஆனால், கடமை – கண்ணியம் – கட்டுப்பாடை இவர்கள் பின்பற்றவில்லை. அதுவும் க – க – க தான். இப்படித்தான் அவர்களுடைய ஆட்சி இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறதே தவிர வேறல்ல, இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டக்கூடிய நேரம் விரைவிலே வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு பேசினார்.