கடந்த 14 ஆம் தேதி தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்ட தமிழக பாஜக அண்ணாமலை, தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன.
இந்நிலையில் அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளார். ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் ஆதாரமற்றது. இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.
அண்ணாமலைக்கு விடுக்கப்பட்டுள்ள அந்த நோட்டீஸில், 'தனது பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக 500 கோடி தர வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க தவறினால் குற்றவியல் வழக்கு தொடரப்படும். திமுகவினர் மீது அண்ணாமலை தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். திமுகவின் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி தொடர்பில்லாத சொத்துக்கள் உள்ளிட்டவற்றின் மூலம் திமுகவிற்கு 1409.94 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக போலியான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளீர்கள். சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவை நீக்க வேண்டும் .
வருமானவரித்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் திமுகவினுடைய சொத்துக்கள் கணக்குகள், சொத்து விவரங்களை மறைத்து இருந்தால் வருமானவரித்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். திமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அண்ணாமலை பொய்யான தகவல்களை கூறியுள்ளார். ஒருவர் திமுகவின் உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் கட்சியின் சொத்தாக மாறாது. ஒரு தனி நபருடைய சொத்துக்களுக்கும் அரசியல் கட்சியினுடைய சொத்துக்கும் அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கொள்கையை விளக்குவதற்காக உதாரணம் காட்ட விரும்புகிறோம். உங்களிடம் மூன்று, நான்கு ஆடுகள் இருப்பதாக அடிக்கடி கூறுவதால், உங்கள் ஆடுகள் பாஜகவின் சொத்தாக மாறுமா? உங்கள் கைக்கடிகாரம் பாஜகவின் சொத்தாக மாறுமா?' என தெரிவிக்கப்பட்டுள்ளது.