தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அவரது ‘என் மண், என் மக்கள் நடைப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சியாக இருக்கிறது. கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்துள்ளார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு கம்பத்தை வைத்து பலகைகளை வைத்துள்ளார்கள். ஆனால், இந்துக்கள் நாம் அறவழி வாழ்க்கை வாழ்கிறோம்.
இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும். மேலும், கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு முன்பும் அகற்றி காட்டுவோம். சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்” என்று கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், அண்ணாமலை சென்னையில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ பெரியார் சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். ஆனால், ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள பெரியார் சிலையின் கீழே உள்ள வாசகத்தை மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை மக்களின் கருத்தாக நாங்கள் பிரதிபலிக்கிறோம். அந்த வாசகத்தை தேவாலயத்தின் முன்போ அல்லது மசூதி முன்போ வைக்க ஒப்புக்கொள்வார்களா? அதனால், இந்து கோவில்கள் வெளியே அந்த வாசகம் இடம்பெற வேண்டாம் என்று சொல்கிறோம். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்போது அந்த வாசகம் அகற்றப்படும். பெரியார் சிலை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு மாற்றப்படும்.
பா.ஜ.க பெரியாரை அவமதிக்கவில்லை. அவருக்கு கொடுக்க வேண்டிய உரிய கவுரவத்தை கொடுப்போம். அதேபோல், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அதை செய்வோம். ஆட்சியில் இருப்பவர்கள் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதால்தான், பா.ஜ.க கோவில் தொடர்பான தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கிறது” என்று கூறினார்.