சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அதிமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அதிமுக மாநில மாநாட்டிற்கான இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுகவின் பொன்விழா ஆண்டு என்பதை குறிக்கும் வகையில் இந்த இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அதிமுகவை வீழ்த்துவதற்கு திமுக ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய அனைத்து செயல்களையும் அதிமுகவினர் தகர்த்தெறிந்தனர். பல விமர்சனங்களை சந்தித்தோம். அதிலும் குறிப்பாக அதிமுக மூன்றாக நான்காக போய்விட்டது என்று சொன்னார்கள். அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துபோய்விட்டது என்ற கருத்துகளை பலர் முன்வைத்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுகவினர் எழுச்சியோடு பணியாற்றி ஒன்றரை மாதக் காலத்தில் ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை அதிமுகவில் சேர்த்துள்ளோம். இதன் மூலம் இனி அதிமுகவில் வெற்றிடம் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம். தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிமுக தான். சிலர் இந்த இயக்கத்தை முடக்க வேண்டும், உடைக்க வேண்டும் என கனவு கண்டார்கள்” எனப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், “2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே பொது சிவில் சட்டத்தை எதிர்த்திருக்கிறோம். பொது சிவில் சட்டத்தை கொண்டு வரக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கும். 2019 ஆம் ஆண்டு தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறோம். சிறுபான்மையினருக்கு எதிரான பொது சிவில் திட்டத்தை எந்த வடிவிலும் கொண்டுவரக்கூடாது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது” என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.