ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தற்போது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உள்ள அதிமுகவில் புதிதாக உறுப்பினர் சேர்க்கையை நேற்று மாலை துவக்கி வைத்தேன். ஏனென்றால் புனித வெள்ளியான நேற்று ஒரு நகரச் செயலாளரிடத்தில் படிவங்களைக் கொடுத்து உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தேன்.
இன்று அனைத்து ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூராட்சி நகரச் செயலாளர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இனி அதிமுக என்பது தமிழகத்தில் அசைக்க முடியாத ஒன்று என்று இந்த உறுப்பினர் சேர்க்கையில் உருவாக்கிக் காட்டுவோம்.
அண்ணாமலை தலைமையில் 2026ல் பாஜக ஆட்சி அமையும் எனச் சொல்கிறார்கள். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். அதில் எந்த மாற்றங்களும் இல்லை. சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றி உரையாற்றியுள்ளேன். அந்த உரையை உங்களுக்கு வழங்குகிறேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், “அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனச் சொல்கிறீர்கள். ஆனால், பிரதமர் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரையும் சந்திக்கிறார்” என கேள்வி எழுப்பியதற்கு, “அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “குறைந்தது ஒரு தொகுதியில் 75 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். குறைந்தது இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பது இலக்கு” என்றார்.