தமிழ்நாடு முழுக்க கரோனா காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரை அனைத்து வழிப்பாட்டு தலங்களையும் மூடிவைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தினங்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தியும் நேற்றைய முன் தினம் (7ஆம் தேதி) தமிழ்நாடு முழுக்க 12 இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று பாஜக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “டிசம்பர் 31 வரை பண்டிகைகள் நடப்பதால் கூட்டங்களை கவனமாக அனுமதியுங்கள் என மத்திய அரசு சொல்லியிருக்கிறது. குறிப்பா டெஸ்ட் பாஸிட்டிவ் ரேட் (தொற்று பரவலின் எண்ணிக்கை) எங்கெல்லாம் 5 சதவீதத்திற்கு மேல் உள்ளதோ அங்கெல்லாம் கண்டிப்பாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும். 5 சதவீதத்திற்கு கீழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தளர்த்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தர்மபுரியில் 2.48 சதவீதம் தொற்று பரவலின் எண்ணிக்கை இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டில் அதிகப்படியான சதவீதம். அதேபோல், சேலத்தில் 0.02% எனத் தொற்றுப் பரவலின் எண்ணிக்கை இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் குறைந்தபடியான சதவீதம். தமிழ்நாட்டில் அதிகளவில் இருப்பதே 2.48 சதவீதம்தான். இது மத்திய அரசு தெரிவித்துள்ள 5 சதவீதத்திற்குக் கீழ் உள்ளது.
கோயில்களைத் திறக்க 10 நாட்கள் கெடு கொடுத்திருக்கிறோம். அமைச்சர் சொல்லியிருக்கிறார், ‘1000 பா.ஜ.க. வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது’ என்று; ‘நூறே, நூறு பூத் தலைவர்களை அனுப்புகிறோம்; திமுகவை அசைத்துக் காட்டுகிறோம்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.