முன்னேறிய சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, தமிழகத்தின் நிலைபாட்டை அறிய தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசியதாவது,
இது நாடே திரும்பி பார்க்கும் வகையில் முடிவெடுப்பதற்காக கூடியுள்ள கூட்டமாகும். சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும், இட ஒதுக்கீட்டு போராட்டமாக இருந்தாலும் தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே வழிகாட்டியுள்ளது.
தென்னிந்திய நல உரிமை சங்கம் தொடங்கி பெரியார், அண்ணா , காமராஜர், அம்மா, கலைஞர் ஆகியோர் கட்டிக்காத்த வழியில், இவ்விஷயத்தில் நாம் முடிவெடுக்க வேண்டும்.
எந்த சமூகத்தில் ஏழைகள் இருந்தாலும், அவர்கள் இரக்கத்திற்குரியவர்கள். அவர்கள் முன்னேற்றப் பட வேண்டும். ஆனால் அதற்கான அளவுகோல் என்ன? கிராமத்தில் தினமும் 27 ரூபாய் சம்பாதிப்பவனும், நகரத்தில் தினமும் 33 ரூபாய் சம்பாதிப்பவனும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர் என்பது அளவுகோலாக உள்ளது. இங்கே, வருடத்திற்கு 8 லட்சம் சம்பாதிக்க கூடிய, 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கக் கூடிய ஒருவரை, முன்னேறிய சமூகத்தில் ஏழை என்கிறார்கள்.
முன்னேறிய சமூகத்தில் உள்ள எந்த ஏழை 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கிறார்? விவசாய கூலியாக, கட்டிட தொழிலாளியாக யார் இருக்கிறார்? சாலைப் பணியாளராக யாராவது இருக்கிறார்களா? பசித்தவனும், ஏப்பம் விடுபனும் ஒன்றா? இது சமூக நீதிக்கு எதிரான திட்டம். இதை ஏற்க கூடாது.
இன்று நாடெங்கிலும் ஜனநாயகமும், சமூகநீதியும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. தமிழ்நாடு தான், சமூக நீதியை காப்பாற்ற வேண்டும். இந்தியாவுக்கே வகுப்பெடுக்க வேண்டும். மருத்துவ கல்லூரியில் கூடுதல் இடங்கள் தருகிறோம் என மத்திய அரசு ஏமாற்ற பார்க்கிறது. அவர்கள் நமக்கு அல்வா கொடுக்கிறார்கள். (பலத்த சிரிப்பு ) அது அல்வா அல்ல. ஃபெவிகால் பசை. அதை அறியாமல் சாப்பிட்டால், நாக்கு, தாடை, உதடு எல்லாம் ஓட்டிக் கொள்ளும். பிறகு வாயே திறக்க முடியாது. சமூக நீதியை பேசவே முடியாது.
எனவே இங்கு பேசிய பெரும்பான்மையான தலைவர்களின் கருத்துப் படி, இந்த ஆபத்தான இடஒதுக்கீடு திட்டத்தை அடியோடு எதிர்க்க வேண்டும். நிராகரிக்க வேண்டும். இதை இந்த அரசு செய்தால், வரலாறு உங்களுக்கு பாராட்டுகளை குவிக்கும். இந்த நல்ல கூட்டத்திற்கு முக்கிய கட்சிகளை அழைத்து கருத்து கேட்டமைக்கு, தமிழக அரசுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றிகளை கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தமிமுன் அன்சாரியுடன் மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் தைமியாவும் பங்கேற்றார்.
இக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, CPM, CPI, விசிக, நாம்தமிழர் கட்சி, மதிமுக, தேமுதிக, முஸ்லிம் லீக், தமாகா, பாமக, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப் படை, புதிய தமிழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும், அவற்றுடன் திராவிடர் கழகமும் பங்கேற்றது.