தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் சமீபகாலமாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி கட்சியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து ஐ.டி.விங் செயலாளர் திலிப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில், மூன்று முக்கியப் பொறுப்பாளர்களும் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதனிடையே பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, “நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கட்சி மாறிய கொள்கையற்ற பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?” என எடப்பாடியை கடுமையாகச் சாடியிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் பாஜக, அதிமுக குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அதிமுக குறித்து அமர்பிரசாத் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “தலைமைகள் பேசிக்கொள்ளும் போது ஆள் அட்ரஸ் இல்லாதவர்களின் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்றார்.