
தான் மேற்கொள்ள இருக்கும் நடைப்பயணம் குறித்தும் நடைப்பயணம் மேற்கொள்ளும் தேதி குறித்தும் அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மாநில அளவிலான சுற்றுப் பயணத்தை திருச்செந்தூரில் இருந்து துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்தான முழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடையே கர்நாடகத் தேர்தல் வந்ததால் அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ‘என் மண் என் மக்கள்’ எனும் இணையம் தொடங்கப்பட்டு நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்முறையாக தமிழ்நாட்டில் இம்மாதிரியான செயல்களை நாம் பார்க்கிறோம். வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி அவர்களை மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்துள்ளனர். இன்று காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போடும் வரை இது வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டது எல்லாம் கரூர் துணை மேயர், கவுன்சிலர் போன்றவர்கள். இவர்கள் எல்லாம் மக்கள் பிரஜைகளாக இருக்கிறார்கள்.
ரவுடிகளை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து ரவுடிசம் செய்வதுதான் திமுகவின் திராவிட மாடல். இந்த விவகாரத்தில் குறிப்பாக செந்தில் பாலாஜியின் மீது ஐடி துறை எடுக்கும் நடவடிக்கை என்பது தமிழ்நாடே பேர் சொல்லும் அளவுக்கு இருக்கும். அதற்கு காவல்துறையினர் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் கேள்வி. ஜூலை 9 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடைப்பயணம் ஆரம்பிக்கும். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து முழு விவரங்களையும் சொல்கிறேன். 6 மாத காலம் நடைப்பயணம் நடக்கும். தேசியத் தலைவர்கள் பங்கேற்பார்கள்.” எனக் கூறினார்.