நமது நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று (30.01.2024) நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க உறுதிமொழிகளும் ஏற்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். அதே போன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முன்னதாக கடந்த 28 ஆம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். உறுதிமொழி ஏற்பில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தமிழ்நாட்டின் மாண்பை இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்துவோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.