நடைபெறவிருக்கும் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரில் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். அந்தப் பிரச்சாரத்தில் பேசிய மோடி, இந்த நாடு வெற்று கோஷமிடும் எத்தனையோ அரசுகளை பார்த்திருக்கிறது. ஆனால் முதல் முறையாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசை பார்க்கிறது.
நிலம், வானம், விண்வெளி என எதிலும் எனது தலைமையிலான அரசு துல்லியத் தாக்குதலை நடத்தியுள்ளது. உங்களின் காவலாளி அரசு துணிச்சாலாக காவல்காத்து துல்லியத் தாக்குதல் நடத்தும்.
இந்த அரசு செய்கின்ற விஷயங்கள் மீதும் சாதனைகள் மீதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி பாகிஸ்தானுக்கு ஹீரோவாக உள்ளார்கள். இந்த தேர்தலில் மக்கள் மீண்டும் நாட்டை ஆள்வதற்கு, நமது நாட்டின் ஹீரோ வேண்டுமா அல்லது பாகிஸ்தானின் ஹீரோ வேண்டுமா என்பதை முடிவு செய்வார்கள்.
காங்கிரஸ் அறிவித்திருக்கும் குறைந்தபட்ச ஊதியம் எனும் திட்டமே கேலிக்கூத்தானது. ஒருபுறம் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் காவலர்களும், மற்றொருபுறம் ஊழல் கரைபடிந்த கூட்டமும் நிற்கிறது; இந்த தேர்தல் பலத்திற்கும் பலவீனத்திற்கும் இடையே நடைபெறுவதுதான் என்று பிரதமர் மோடி பேசினார்.