அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக 25 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மத்தியிலும் பாஜக ஆட்சி அமைத்தது. இதனை அடுத்து கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சி கலைக்கப்பட்டு உடனடியாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பலரால் நம்பப்பட்டது.
தோல்வியினால் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் எம் எல் ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார். இதனால் அதிருப்தியில் இருப்பவர்களை குமாரசாமி சமாதனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது. “பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளார். பாஜகவுக்கு பதவி ஆசை இல்லை. கர்நாடகாவில் நாங்களும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். எங்களைப் பொறுத்தவரை குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க விரும்பவில்லை. நான் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்று டெல்லி மேலிடத் தலைவர்களை சந்தித்து பேசினேன்.
அப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசை அகற்ற முயற்சிக்க வேண்டாம் என பாஜக தலைவர்களுக்கு வலியுறுத்துமாறு அறிவுரை கூறினார்கள். எனவே தற்போதைக்கு அமைதி காக்க முடிவெடுத்துள்ளோம். இன்னும் சில தினங்களில் காங்கிரஸும், மஜதவும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டு ஆட்சியை அவர்களே கவிழ்த்து விடுவார்கள்.
நான் ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக சித்தராமையா தொடர்ந்து பொய் கூறி வருகிறார். அவரே அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு அனுப்பி வருகிறார். ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதைப் போல நாடகமாடி காங்கிரஸ் மேலிடத்திற்கு தன்னை ஒரு தலைவராக சித்தராமையா காட்டி வருகிறார்.
எங்களைப் பொருத்தவரை கட்சியை பலப்படுத்தும் பணிகளில் இறங்கி இருக்கிறோம். மோடியின் அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த 4 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கர்நாடகாவின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவோம்”.