கடந்த ஒரு வாரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை இந்தியா முந்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் இந்தியாவில் 4,11,379 பேர் புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர், 6,251 பேர் உயிரிழந்தனர். இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் 3,69,575 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர், 7,232 பேர் உயிரிழந்தனர். பிரேசிலைப் பொறுத்தவரைக் கடந்த ஒரு வாரத்தில் 3,04,535 பேர் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டனர், 6, 914 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கடந்த 4-ஆம் தேதி முதல் 10- ஆம் தேதிவரை புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால் உலகளவில் 23 சதவீதத்துக்கும் அதிகமான கரோனா நோயாளிகளும், 15 சதவீதத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளும் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட 110 நாட்கள் எடுத்துக்கொண்டது, ஆனால், 10 லட்சத்தை அடுத்த 59 நாட்களில் எட்டியது, அதேபோல, அடுத்த 24 நாட்களில் 10 லட்சத்தை எட்டி மொத்த பாதிப்பு 20 லட்சமாக அதிகரித்தது என உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.